சென்னை:மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து, அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பாஜக மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைய வேண்டும் என்கிற பா.ஜ.கவின் விருப்பத்திற்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார்.
இதை சகித்துக் கொள்ளாத அ.தி.மு.க, பா.ஜ.கவோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்குப் பிறகு அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அ.தி.மு.கவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது.