தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 10:24 PM IST

ETV Bharat / state

திராவிடப் பூமியின் தலைநகரை குறி வைக்கும் பாஜக!

இந்தக் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜகவுக்கும் சென்னையில் செல்வாக்கு உள்ளது என்பது புலப்படும். இதன்மூலம் அதிமுக கூட்டணியோடு பாஜக தலைநகரில் போட்டியிடுமானால், அக்கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிமாகவே உள்ளது என்று கூறலாம்.

bjp to mark dravidian capital chennai in tamilnadu by election 2019

உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக திட்டம் வகுக்க ஆரம்பித்துள்ளன. எத்தனை இடங்களைக் கேட்பது, குறிப்பாக எந்தெந்த இடங்களைக் கேட்க வேண்டும் போன்ற பேச்சு வார்த்தைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் சில முக்கிய மாநகராட்சிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். அதில் முதல் முக்கியத்துவம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சிக்கு எப்போதும் உண்டு.

பாஜக போடும் கணக்கை அதிமுக ஏற்றுக்கொண்டு தலைநகரை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்குமா என்றால், அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. ஆளும் கட்சியாக இருந்து கொண்டு தலைநகரில் போட்டியிடவில்லையென்றால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் செல்வாக்கு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி கடந்த மக்களவைத் தேர்தலில் வடசென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த அதிமுக, தென் சென்னையில் மட்டுமே போட்டியிட்டது. எனவே, இதே நிலை உள்ளாட்சித் தேர்தலிலும் ஏற்பட்டால், அது கட்சிக்கு வீண் கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் அதிமுக பாஜகவின் கணக்கை செட்டில் செய்வது சற்று சந்தேகமே. சென்னை மாநகராட்சியைக் கேட்கும் அளவிற்கு பாஜகவுக்கு சென்னையில் செல்வாக்கு இருக்கிறதா என்று கேட்டால், அதை இல்லை என்றும் மறுத்துவிட முடியாது.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையைப் பொறுத்தவரையில் திமுக 10,18,931 வாக்குகளையும், அதிமுக 9,71,547 வாக்குகளையும் பெற்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக பாஜக 1,38,827 வாக்குகளையும், மக்கள் நலக் கூட்டணி 1,01,541 வாக்குகளையும் பெற்றன. இந்தக் கோணத்தில் பார்த்தால், பாஜக தனித்துப் போட்டியிட்டு சென்னையில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

வடசென்னையில் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜக, மத்திய மற்றும் தென் சென்னையில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக வெளிமாநிலத்தவர் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாப்பூர், வேளச்சேரி, தியாகராய நகர், விருகம்பாக்கம், எழும்பூர், துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் 4 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

அதேபோல, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து, தென் சென்னையில் போட்டியிட்ட பாஜக 2,56,786 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ஆனால், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 24,420 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜகவுக்கும் சென்னையில் செல்வாக்கு உள்ளது என்பது புலப்படும். இதன்மூலம் அதிமுக கூட்டணியோடு பாஜக தலைநகரில் போட்டியிடுமானால், அக்கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சற்று அதிமாகவே உள்ளது என்று கூறலாம்.

'தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்' என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அதன் முதல்படியாக திராவிட மண் எனப்படும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், தாமரையை மலர வைக்க வேண்டும் என்று அக்கட்சித் திட்டம் தீட்டி வருகிறது.

இது நிறைவேறினால் மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் அக்கட்சியின் செல்வாக்குக் கூடும். அதனூடாக வரும் காலங்களில் தமிழ்நாட்டில் காலூன்றி, திராவிடப் பூமியை தன்வசமாக்கிவிட வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய இலக்காக இருக்கிறது.

இதையும் படிங்க:உள்ளாட்சி உங்களாட்சி-1: இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உருவான கதை!

ABOUT THE AUTHOR

...view details