இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு தொடங்கிக் கிட்டத்தட்ட இன்றோடு ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் பசித்தவருக்கு அன்னமிடும் திருக்கோயில்களின் செயலை தமிழ்நாடு அரசு முடக்கி வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், இஸ்லாமியப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரம்ஜான் கஞ்சிக்கான அரிசியைத் தமிழ்நாடு அரசு வழங்கியது. அதே போல் கோயில்களில் அன்னதானம் தொடர, அனுமதிக்க வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அரிசி வழங்க வேண்டும். இது போதாதென்று தேர்ந்தெடுக்கப்பட்ட 47 திருக்கோயில்களிலிருந்து 10 கோடி ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்ப அறநிலையத்துறை ஆணையிட்டிருப்பது மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
அந்தப் பணம் வருமானமின்றி முடங்கிக் கிடக்கும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், ஓதுவார்கள், மங்கல இசைக் கலைஞர்கள் மற்றும் அக்கோயில் சேர்ந்த பக்தர்கள், குடிமக்கள் ஆகியோரின் நிவாரணத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
பாஜக வெளியிட்டிருந்த அறிக்கை நலிவுற்ற பக்தர்களின் வீட்டிற்கு உணவுப் பொட்டலம் அனுப்பப்பட வேண்டும். ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானம் ஊரடங்கு நிலையிலும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்து வரும் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். புதுவை மாநிலத்தில் கோயில்களில் அன்னதானங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்நிலை தொடர வேண்டும்.
எனவே தமிழக அரசின் அறநிலையைத்துறை, தனது ஆணையைத் திரும்பப் பெறுவதோடு, கோயிலைச் சேர்ந்தவர்கள், பக்தர்களின் பசி முதலான துயர் போக்கும் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு - சுகாதாரத்துறை தகவல்