சென்னை: அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய மத்திய அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சோதனைகள் மூலமாக எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவு காண்கிறது எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது எதிர்க்கட்சிகளை வீழ்த்திவிட வேண்டுமென்று கடுமையான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களைச் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதுவரை அமலாக்கத்துறை கடந்த 9 ஆண்டுகளில் பதிவு செய்த 1,569 வழக்குகளில் 9 வழக்குகளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கைத் தடுத்து நிறுத்த வழக்குத் தொடுத்துள்ளன. அந்தளவிற்கு அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்து சிறையில் அடைப்பது, மன உளைச்சலை ஏற்படுத்துவது, அரசியல் ரீதியாக அவர்களைச் செயல்பட விடாமல் முடக்குவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது.