தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வு நிச்சயம் திரும்பப் பெறப்படமாட்டாது' - அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் மாநகராட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்விற்கான சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Nov 21, 2021, 5:28 PM IST

Updated : Nov 21, 2021, 7:56 PM IST

சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி ஆகியோர், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'சென்னை மாநகரத்திற்குட்பட்ட மூன்று மாவட்டங்களுக்குத் தற்போது விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கான விருப்ப மனு பெறப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிக்கும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. அதில் உள்ள விவரங்களின் அடிப்படையில் அவர்களின் சேவை மற்றும் மக்கள் பணிகள் அடிப்படையில் எந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.

அதிமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை

நீட் மற்றும் பாலியல் வன்புணர்வு குறித்து பேசிய அண்ணாமலை

வேளாண்மைச் சட்டத்தைப் பொறுத்தவரை டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தார்கள். விவசாய சட்டங்கள் வேண்டும் என்பதை அதிகமாகப் பேசியவர்களில் நானும் ஒருவர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

விவசாய சட்டம் செயல்படுத்தப்படக்கூடாது என்பதற்காக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சில மாநிலங்களில் இந்த சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த நிகழ்வில், அமைச்சரின் மகன் கூட கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். விவசாயிகள் மீது தடியடி நடத்தியது மோடி தான் காரணம் என கூறுவது நியாயமில்லாதது.

இதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை. இது ஒரு தவம், இதற்கான சூழல் மீண்டும் வரலாம். அப்போது விவசாயிகள் ஏற்றுக்கொள்ளலாம். பிரதமர் மோடியும் விவசாய சட்டத்தை திரும்பப்பெறும்போது, விவசாயிகளிடம் முழுமையாகப் புரியவைக்க முடியவில்லை எனதான் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்திலும் விவசாயிகளின் விருப்பத்தின்படி சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவே கூறியிருந்தார். மேலும் விவசாய சட்டத்தில் உள்ள நன்மைகளைப் பல மாநிலங்கள் ஆதரித்தன.

இந்தச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதால், கேரளாவில் மீண்டும் மண்டியை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 2016ஆம் ஆண்டு கான்ட்ராக்ட் பார்மிங் ஆக்ட்டை (Contract forming act) திமுக அரசு ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது

நீட்(NEET) தேர்வைப் பொறுத்தவரை அதனை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாட்டில் கூக்குரல் போட்டு வருகின்றனர். நீட் நிச்சயம் இருக்கும்.

விவசாய சட்டம் தவறு என்று நான் இப்போதும் கூறவில்லை. நீட் என்பது சரி என அனைத்து மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ளபட்டது.

நீட் தேர்வுக்கு வருவதற்கு முன்னால் தான், இதனை அரசியல் ஆக்கினார்கள். ஆனால், தேர்வின் முடிவுகள் அறிவித்த பிறகு அதனைப் பற்றி பேசுவது கூட இல்லை. நீட் தேர்வு என்பது சாதாரண மாணவர்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 2015,16,17 ஆகிய ஆண்டுகளில் நீட் தேர்வில் பிரச்னை இருந்தது உண்மை தான். அதன் பின்னர் மாநில மொழிகளிலும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

மேலும் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் படி சாதாரண ஒரு மனிதர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், எதிர்ப்பாகத்தான் பார்க்கப்படும்.

நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மனுவை பல வகையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் அவருக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து அரசிலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுப்பார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

பாலியல் குற்றங்களுக்குத் தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்குப் புரிய வந்தால், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்குப் பயம் ஏற்படும்.

காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்கள் மீதான சட்டத்தில் தண்டணைகள் அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jai Bhim Controversy: வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!

Last Updated : Nov 21, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details