தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழிசை மனு: கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிபெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

bjp tamilisai challenging dmk kanimozhi victory

By

Published : Sep 5, 2019, 2:19 PM IST

Updated : Sep 5, 2019, 2:47 PM IST

நடந்துமுடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசையை விட மூன்று லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது ஆட்சேபனை தெரிவித்தபோது, அதை தேர்தல் அலுவலர் நிராகரித்துவிட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும், கனிமொழியின் கணவர், மகன் ஆகியோர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் வருமான விவரங்கள் பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மாறாக கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இணைக்கவில்லை. அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பரப்புரையின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தமிழிசை மனுவிற்கு பதிலளிக்கும்படி திமுக எம்.பி. கனிமொழி, தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Last Updated : Sep 5, 2019, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details