பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர் சந்திப்பு சென்னை:சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியினர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க அவர்களிடம் ஒன்றுமே இல்லை. பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சியில் சர்தார் பட்டேல், ஜவகர்லால் நேரு உள்ளிட்டோர் காலம் காலமாக வேண்டாம் என கூறி வந்தனர். எந்த மதத்தினராக இருந்தாலும் திருமணத்தில் சரியாக, முறையாக இருக்க வேண்டும்.
நம் நாட்டில் ஆண், பெண் இருபாலரும் சரிசமமாக உள்ளனர். அதனால் ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்க முடியாது. அதனால் பொது சிவில் சட்டம் வந்துதான் ஆக வேண்டும். இது சட்டத்திலேயே உள்ளது. காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். தகுந்த நேரத்தில் அது கொண்டு வரப்படும்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் தெரிகிறது, பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி குறைந்து வருவது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும், இது பண்ண வேண்டும் என பேசிக்கொண்டுதான் இருக்கிறார். இது ஜனநாயக நாடு. யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
இதையும் படிங்க:"கோயில் சொத்தை தொட்டால் குடி அழியும்" அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஹெச்.ராஜா வார்னிங்!
திமுகவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில், மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அவர்களுக்கு விருப்பமில்லை. வெள்ளைக்காரர்கள் கொடுத்துச் சென்ற வரலாற்றையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் இருக்கும் வசதிகளை எல்லாம் அழித்து வருகிறார்கள். இது திமுகவின் தில்லுமுல்லுத்தனம்தான்.
மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் பெயில் ஆகிவிட்டார். பிரதமருக்கு வெளிநாடு சுற்றுவதற்குதான் அக்கறை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இல்லை. அவர் முதலில் மணிப்பூர்தான் சென்று இருக்க வேண்டும். அமெரிக்கா செல்வதற்கு என்ன அவசரம் அவருக்கு? அவர் அமெரிக்கா சென்று என்ன கொண்டு வந்தார்? 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். ஆனால் மோடி பிரதமராக இருப்பாரா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.
திமுகவிற்கு சினிமாவைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. எந்த கலாச்சாரமும் அவர்களிடம் இல்லை. வரும் தேர்தலில் கட்டாயம் திமுக தோல்வி பெறும்” என்றார். மேலும், தமிழகத்தில் அண்ணாமலை வளர்ச்சி குறித்து கேள்விக்கு, அண்ணாமலை என்றால் யார் என்றும் தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? எனக்கு அதைப் பற்றி தெரியது. நான் தமிழகத்தில் பாஜகவை பார்த்ததே கிடையாது எனவும் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க:"அரசு மருத்துவர்கள் தப்பிக்க அப்பட்டமாக பொய்" - குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தாய் புகார்!