சென்னை:தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரவியை சந்தித்தார். ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினரின் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், “டாஸ்மாக் குறித்து அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. அதற்காக பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை ஒன்று தயார் செய்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை வாங்கவில்லை. ஆகவே, ஆளுநரிடம் கொடுத்தோம். தமிழ்நாட்டில் ஒன்பது அமைச்சர்களின் ஊழல் சொத்துகள், பினாமி சொத்து விவரங்கள் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஊழல் குறித்த விவரமும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஆண்டுக்கு 3ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. சென்னை 1 எல்காட்டில் 95.4 விழுக்காடு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. கனகர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிறுவனங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
அதில் 2ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்டுகொள்வதில்லை, மதுவினால் சமூகப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் கவலை கொள்வதில்லை. மதுவிலிருந்து திருந்தியவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் இல்லை. இது போன்று எதுவும் இருக்காது. ஆனால், அந்த துறைக்கு ஒரு அமைச்சர் இருப்பார். திமுக-வின் குறிக்கோள் மது விற்பனையை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனால், பெயரளவுக்குத்தான் மதுவிலக்குத் துறை என்று உள்ளது.