சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், ''ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயிலின் வழிப்பாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் முடிந்து நான்கு நாட்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோயிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.
13.12.1951, 2591/1951 மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீக்ஷிதர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 2660 வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு (Denominated community) என்றும், 668/1951 என்ற மனுவின் மீதான விசாரணைக்குப் பிறகு வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாக அதிகாரம், தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதனை எதிர்த்து, 1953ஆம் ஆண்டு, மெட்ராஸ் மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன் படி, இந்து சமயத்தின் உட்பிரிவுகள் (Denominated Community) நிர்வகிக்கும் கோயில்களில், தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
இன்று நடக்கும் அத்துமீறல் போல், முந்தைய திமுக ஆட்சியிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வர, 2009ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணையைத் திரும்பப் பெறப்பட்டது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலின், நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை, தீக்ஷிதர்களால் ஏற்கப்பட்டு அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.