சென்னை: கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ஆண்டு தோறும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை, பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகளின் நலனுக்காகச் செலவிடாமல் திருப்பி அனுப்புவது திறனற்ற திமுக அரசின் வழக்கம். பட்டியலின சமுதாயத்தினரின் பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு போன்றவை எதுவுமே நிறைவேற்றவில்லை.
சென்ற ஆண்டு பட்டியலின சமுதாயத்தினருக்காக மத்திய அரசு வழங்கிய சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது திமுக. ஆனால் தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக புதியதாக நிதி எதுவும் ஒதுக்காமல், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நல நிதியை மடைமாற்ற முயற்சித்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகள் நல நிதியை, பட்டியலின சமுதாய மக்கள் நலனுக்காக மட்டும் தான் பயன்படுத்த முடியும்.