சென்னை:சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக வலியுறுத்தியும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் 66 இடங்களிலும் இந்து அறநிலைய துறை அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்ட போராட்டத்தில் பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய வானதி சீனிவாசன் , தமிழக பாஜாக மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்பது சொல்வது புதிதாக இருக்கும். சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்துவது புதிததல்ல. 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சானாதன தர்மத்தையும், இந்து மதத்தையும் திமுக கொச்சைப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இந்தியா மட்டுமன்றி அனைத்து மக்களும் இதற்காக கண்டன குரலை பதிவு செய்துள்ளனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்துமதமும், சனாதன தர்மமும் ஒன்று என கூறிய பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறினார்.
அதனை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டுள்ளார். பொதுமக்களின் கண்டன குரலைப் பார்த்து நாங்கள் அப்படி கூறவில்லை என முதலமைச்சரும் திமுகவினர் 4 நாட்களில் மாற்றி பேசிவிட்டனர். இந்து தர்மத்தில் கொடுமைகள் நடக்க சனாதனம்தான் காரணம் அதற்காக நாங்கள் போராடுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
சனாதன தர்மம் யாருக்கும் எதிரி கிடையாது. இஸ்லாம், கிறிஸ்தவர்கல் எனஅனைத்து மதத்தினரும் இங்கு கூடி உள்ளனர். சனாதன தர்மத்திற்கு ஆதியும் கிடையாது முடிவும் கிடையாது அனைத்து காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தர்மம். மதங்கள் உருவாவதற்கு முன்பே சனாதன தர்மம் உருவாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகாலமாக சனாதன தர்மம் உள்ளது. கிறிஸ்தவமும், இஸ்லாமுக்கும் உருவாவதற்கு முன்பே உருவாகிவிட்டது.
சனாதன தர்மம் அழிக்கும் ஒன்றாக இருந்தால் கிறிஸ்தவமும், இஸ்லாமும் எப்படி இந்தியாவில் வளர்ந்திருக்க முடியும். சனாதன தர்மத்தில் விதவைகள் உடன்கட்டை ஏறுவது உள்ளது என முதலமைச்சர் கூறி உள்ளார். முதலமைச்சர் படிப்பது இல்லை படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் இல்லை.
விதவைகள் உடன்கட்டை ஏறுவது எப்போது வந்தது தெரியுமா? போர்கள் நடந்த போது தோற்றவர்களின் மனைவிகளை கவர்ந்து செல்வதை தவிர்க்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். பெண்கள் உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று. ராஜாராம் மோகன்ராய் என்ற சனாதனி தான் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போது திராவிடர் கழகம் இருந்ததா? திமுக? பெரியார் இருந்தாரா?
சனாதனத்தில் உள்ள சிறிய சிறிய பிரச்சினைகளை சனாதனம் உருவாக்கவில்லை ஒரு சில மனிதர்களாலே கொண்டுவரப்பட்டது. அதனை சீர்திருத்தியவர்வர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர்கள்தான். இந்தியாவை பொறுத்தவரை அனைத்து மதத்தையும் உள்ளடக்குவதுதான் சனாதன தர்மம். குஜராத்திலிருக்கும் ஒரு சனாதனி தான் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தார். அதன் பின்னர் 18-லிருந்த பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியவர் பிரதமர் மோடி.
கடந்த 1956 ஆம் ஆண்டு நடந்த தமிழ் மாநாட்டில் பேசிய அண்ணா, கடவுள் குறித்து விமர்சித்தார். அதன் பின்னர் பேசிய முத்துராமலிங்க தேவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பற்றி பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில் அபிசேகம் செய்யப்படும் என்று கூறினார்.