சென்னை: தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது பேசிய அவர், “உலக முதலீட்டாளர் மாநாடு பற்றிப் பேசுவோம், முதலீட்டாளர் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் 34 சதவீதம் உற்பத்தித் திறன் உள்ளது. ஆகையால் பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.
மேலும், நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் நாங்கள் 10 லட்சம் கோடி எதிர்பார்த்தோம். 2023 உத்திரபிரதேசம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதில் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை உத்தரபிரதேச மாநிலம் ஈர்த்துள்ளது.
மேலும், குஜராத்தில் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்குள் 7 லட்சம் கோடி ரூபாய் ஈர்த்துள்ளது. எனவே, தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும். அதானி குழுமத்தை தமிழக அரசு கடுமையாகப் பேசியது, ஆனால் இன்று தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 66 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டால், தற்போது முதலமைச்சர் டிவிட்டரில் பெருமையாகப் பேசுகிறார்.
நேற்றைய தினம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பல்வேறு நிறுவன அதிகாரிகள் பியூஷ் கோயலை சந்தித்துள்ளனர். மேலும், அடுத்த முறை தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதில் நான் அரசியல் பேச விரும்பவில்லை.
என் மண், என் மக்கள் யாத்திரையில் 144 தொகுதிகளைக் கடந்துள்ளோம். தமிழகத்தில் அரசியல் பாதை மாற வேண்டும் என்று இந்த யாத்திரை தெளிவுபடுத்தியுள்ளது. நாங்கள் தெளிவாக உள்ளோம், பாஜக 2024 தேர்தல் குறித்து தற்போது பேசத் தொடங்கவில்லை. 2024 தேர்தலுக்காக பாஜக தயாராக இருக்கிறதா என்று என்னால் கூற முடியாது, எனக்கு அதற்கு அதிகாரம் இல்லை. யார் கூட்டணியில் இருக்கிறார்கள் இல்லை என்பதை என்னால் கூற முடியாது இந்த முறை களம் மாறிவிட்டது. 2024இல் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறை பிரதமராக வர போகிறார்.
மேலும், என்ன தான் போக்குவரத்து சங்கங்கள் பேசினாலும், அதனை ஏற்கும் தன்மை அமைச்சர் சிவசங்கருக்கு இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் நிதி சூழல் அவ்வளவு சிக்கலாக உள்ளது. அரசிடம் பணம் இல்லை, எனவே சிவசங்கர் மற்றும் முதல்வருக்குத் தெரியும் பேச்சு வார்த்தைகளில் பலன் இல்லை என்று. இன்று பேருந்துகள் இயங்கும், ஆனால் இரவும் அதே ஓட்டுநர்கள் ஓட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.