சென்னை: மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான 'ரோஸ்கர் மேளா' திட்டத்தை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று (அக். 22) தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 75 இடங்களில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். மேலும் இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மத்திய அரசு சார்பில் வேலை:இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இன்று மிக முக்கிய நாள், டிசம்பர் 2023-க்குள் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு சார்பில் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 75 இடங்களில் இன்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளை தமிழ்நாடு இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.
இந்தி திணிப்பு தீர்மானம்:சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தாய்மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது. இந்தியாவில் அதிக பொறியாளர்கள் உருவாக்கும் தமிழ்நாட்டில் தமிழில் பாடம் உள்ளதா?. பயிற்று மொழி தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்துள்ளதா?.
மேயராக உள்ள சகோதரிகள் அதிக பேரை இந்தி எதிர்ப்பு குறித்து பேச வைக்கின்றனர். ஆனால் அவர்கள் தமிழ் எப்படி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்று மொழி தமிழ் என தமிழ்நாடு அரசு அறிவித்தால், பாஜக அதை நிச்சயம் வரவேற்கும். இது மக்கள் பிரச்சனை இல்லை. இந்தி திணிப்பு எங்கும் இல்லை என்று மக்களுக்கு தெரியும். இது காங்கிரஸ் காலத்தில் நடந்தது" என்றார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணையம்:தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணையம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி யார் என்பதை ஆணையம் தெளிவாக கூறவில்லை. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் என் கிணற்றை காணவில்லை என்பது போல் இந்த அறிக்கை உள்ளது. இன்னும் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. உயர் அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. தவறு செய்தவர்கள் மேல் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், இரண்டு மூன்று விசயங்களை உன்னிப்பாக பார்க்க வேண்டும். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆணையத்திடம் பேசினார்.