தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன’ - அண்ணாமலை விளக்கம்

விமானத்தில் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Jan 20, 2023, 9:26 AM IST

Updated : Jan 20, 2023, 9:33 AM IST

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் டெல்லி சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டம் முடிந்து நேற்று (ஜன 19) விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவித்ததும் தேர்தல் பணிக்குழுவை அமைத்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் ஜி.கே.வாசனிடமும் தொலைபேசி மூலம் பேசினேன்.

அவர்கள் கூறிய கருத்தை பாஜக மூத்த தலைவர்களுக்கு தேசிய தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். எங்கள் நிலைப்பாடு குறித்து 3 நாளில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். எனக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கியதற்கு மத்திய அரசு காரணம் சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தும் அச்சுறுத்தல் இருக்கலாம். பாதுகாப்பு சார்ந்த விசயங்களில் மத்திய உளவுத் துறை கூறுவதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் எனக்கு வழங்கப்பட்டு உள்ள கூடுதல் பாதுகாப்பால் மக்களை சந்திப்பதில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு கட்சியில் கொடுக்கப்பட்டு உள்ள பணி கட்சியில் வளர்ச்சிப் பணியை செய்வது தான். விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்று கேட்கின்றீர்கள். முதலில் பாஜக போட்டியிடுமா என்று பார்க்க வேண்டும். பிறகுமான் யார் போட்டியிடுவது என்ற கேள்வி வரும்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை தெரிவிப்பேன். கூட்டணி தர்மம், நியாயம் என்று இருக்கின்றது. குறுகிய கால செயல்பாட்டுக்காக அதை மாற்றிக் கொள்ளக் கூடாது. 2021ம் ஆண்டு யார் போட்டியிட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சிலவற்றை அனுசரித்து செல்ல வேண்டும்” என்றார்.

ஜல்லிக்கட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “தமிழகத்திற்கு திரும்ப ஜல்லிக்கட்டை கொண்டு வந்த கட்சி பாஜக. நான் எனது தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு வரவில்லை. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை களமிறங்கும்.

மத்திய அரசு தடை ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்போதும் தடை விதிக்காது. விலங்கு ஆர்வலர்கள்தான் ஜல்லிக்கட்டு குறித்து கற்பனையாக சில விசயங்களை நினைத்துக் கொண்டு வழக்கு தொடுக்கின்றனர்” என்றார்.

தமிழ்நாடு தமிழக பெயர் சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழகம், தமிழ்நாடு என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வார்த்தையை நீக்கி பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், அரசியல் செய்வதற்கு வேறு விசயம் இல்லாததால் சில கட்சியினர் ஆளுநர் கூறியதை வைத்து அரசியல் செய்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் தனது கருத்தை வெளியிட்டார்” எனக் கூறினார்.

திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா அவசர கால கதவை திறந்ததாக வெளிவந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேஜஸ்வி சூர்யா விமானத்தில் அவசர கால கதவை திறந்தது குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி சிறிய ரக விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றேன். தேஜஸ்வி சூர்யாவின் இருக்கை அருகே எனது இருக்கை இருந்தது. 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது.

விமானத்தில் அவசரகால கதவு திறந்திருப்பது போல் இருப்பதாக நாங்கள் கூறியதை தொடர்ந்து விமானியிடம் தெரிவிக்கப்பட்டது. அதை அவர் பார்த்த பிறகு பொறியாளர்கள் குழு அவசரகால கதவை சோதனை செய்யும் என கூறினார். பின்னர் பொறியாளர்கள் குழு அவசரகால கதவை கழற்றி மீண்டும் மாட்டினார்.

நடந்த அனைத்தையும் தேஜஸ்வி சூர்யாவிடம் விமான நிறுவனம் சார்பில் எழுத்து பூர்வமாக எழுதிக் வாங்கி கொண்டனர். தெரியாமல் தேஜஸ்வி சூர்யா கை அதில் பட்டிருந்தது. எனவே பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குளிர் காற்று வீசிறியை சரி செய்த போது தவறுதலாக நடந்தது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விமானத்தில் அவசரகால கதவை அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது. எதிர்கட்சியினர் இதை ஊதி பெரிது படுத்துகின்றனர். விமானத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியினரும் வந்தனர். விமானத்தின் கதவை நான் திறந்ததாக ஒரு திமுக அமைச்சர் தவறான தகவலை பேசியிருக்கின்றார்” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “குஜராத் கோத்ரா சம்பவம் குறித்து பிரதமர் பற்றி தவறான தகவலை பரப்பி உள்ளனர். இந்தியாவிற்கு வெளியில் யூடியூப்பில் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பும் வகையில் அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளது. தற்போது அவை நீக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு கொலை, வன்புணர்வு, கூட்டு பாலியல் வன்புணர்வு அதிகரித்து உள்ளது. கரோனா காரணமாகவே 2021ஆம் ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால், 2021ஆம் ஆண்டு தரவுகளை வைத்து டிஜிபி பேட்டி கொடுத்ததை பார்த்த போது மனது வலித்தது. வரலாறு காணாத வகையில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொலை, குற்றங்கள் அதிகரித்துள்ளது. அது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளை நான் விரைவில் வெளியிடுவேன்.

தமிழகம் கலவர பூமியாக மாற காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள முதல்வர் விளக்கம் கூற வேண்டும். திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு எல்லாம் காவல் நிலையத்தில் என்ன வேலை. தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றுவேன் என அமைச்சர்கள் போலீசாரிடம் பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும். முதல்வர் காவல்துறைக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். திமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான் முதலமைச்சர் அறிவுரை சொல்ல வேண்டும்” என்றார்.

பாஜக-வில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் அண்ணாமலை பற்றி பேசியதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கட்சியை விட்டு வெளியில் சென்றவர்கள் என்னை பற்றி குறை சொல்லத் தான் செய்வார்கள். அவர்கள் வெளியில் சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என்றே வாழ்த்துவேன். குறிப்பாக திமுகவினர் காலையில் இருந்து இரவு வரை அண்ணாமலை புராணம் தான் பாடுகின்றனர். இதற்கெல்லாம் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது” என கேளிக்கையாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொய் கணக்கு காட்டும் தயாரிப்பாளர்கள்.. துணிவு இயக்குநர் நச்..

Last Updated : Jan 20, 2023, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details