தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மசூதி, தேவாலயம் முன்பு கடவுள் மறுப்பு வாசகங்களை வைத்தால் ஏற்பார்களா? - அண்ணாமலை கேள்வி - அண்ணாமலை கேள்வி

Annamalai: பெரியாரை தரம் குறைத்து பேசவில்லை என்றும், பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் உள்ள சிலையை மசூதி அல்லது தேவாலயம் முன்பு வைக்க அரசியல் கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேச்சு
பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 6:57 PM IST

பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேச்சு

சென்னை:தியாகராய நகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் பெருங்கோட்டப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ 9) நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “103 தொகுதியை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை கடந்துள்ளது. 15ஆம் தேதி முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும். யாத்திரை மூலம் பெரிய அனுபவம் கிடைத்துள்ளது. கட்சி சாராத பலர் பங்கேற்கின்றனர். ஜனவரி இறுதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளேன்.

யாத்திரை மூலம் சாமானிய மனிதர்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. திராவிட மாடல் அரசின் சமூக அநீதியைப் பார்க்க முடிகிறது. நாங்குநேரி சம்பவம், வேங்கைவயல் போன்ற இடங்களில் மக்கள் கேள்வி கேட்கின்றனர். 300 நாட்கள் ஆன பிறகும், வேங்கைவயல் சம்பவத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

பெரம்பலூரில் கல்குவாரி ஒப்பந்தத்தில் பங்கேற்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரை, ஆட்சியர் முன்பு நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முறையான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தமிழ்நாடு நன்றாக இல்லை என்பது யாத்திரை மூலம் தெரிய வந்தது.

ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தேவையானதை செய்யவில்லை. 5 ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை பூதாகரமான பிரச்னையாக மாறும். விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. திராவிட மாடல் அரசில் லஞ்சம் அதிகமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை இந்த மூன்றுமே தீர்மானிக்கும்.

டிசம்பர் முதல் வாரம் பிரதமர் தமிழகம் வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரியவில்லை. பெரியார் சமூக அநீதியை எதிர்த்து போராடியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக மக்களின் பார்வை இன்று மாறியுள்ளது. கோயில் முன்பாக, கடவுளை வணங்குபவர்களை அவமதித்து எழுதப்பட்ட வாசகங்களை மக்கள் விரும்பவில்லை.

எனவேதான் அவற்றை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகற்றுவோம் என்று கூறினோம். கோயில்களுக்கு முன்பாக இல்லாமல், பொது இடங்களில் மற்ற தலைவர்களின் சிலைகளைப் போல், பெரியார் சிலையும் இருக்கலாம். பெரியார் கம்யூனிஸ்ட்-க்கு எதிராக கூறியதை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக வைத்தால் சரியாக இருக்குமா? திமுக குறித்து பெரியார் கூறியதை, திமுக அலுவலகம் முன்பு வைத்தால் அக்கட்சியினர் ஏற்றுக் கொள்வார்களா?

பெரியாருக்கான மரியாதையை நாங்கள் எப்போதும் கொடுக்கிறோம். ஆனால், கோயில் முன்பாக குறிப்பிட்ட வாசகங்கள் அகற்றப்பட வேண்டும். பெரியாரை தரம் குறைத்து நாங்கள் பேசவில்லை. மசூதி, தேவாலயம் முன்பு அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வாசகங்களை வைத்தால், அவர்கள் ஏற்பார்களா? ஆனால் கோயில்களுக்கு மட்டும் ஒரு நியாயமா? இது குறித்து பிற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

இந்துத்துவா கட்சிகளிடமிருந்து 162 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மீட்கப்பட்டதில் மொத்தம் 3 சதவீதம் இந்துத்துவா கட்சிகளிடமிருந்து மீட்கப்பட்டது. எஞ்சிய 97 சதவீதத்தை ஆக்கிரமித்தது யார்? திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சி பெயரையும் சொல்ல வேண்டும்.

அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மட்டுமே, கட்டாயத்தின் பெயரில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்கின்றனர். எங்கள் கொள்கைப்படி அறநிலையத் துறையை நாங்கள் எதிர்க்கிறோம்.

கொக்கு, மீன் என எங்களை சில அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்கின்றனர். அவர்களுக்கு கொக்கு போல பொறுமை இருந்திருந்தால், அந்தந்த கட்சிகள் இப்போது எங்கு நிற்கிறார்களோ, அங்கு நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. கொக்குக்கு இருக்கும் பொறுமை, அந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.

காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜக எனும் கொக்குக்கு உண்டு. அது 2026-இல் தெரியும். எங்களுக்கான நேரம் 2026தான். அமர்பிரசாத் ரெட்டி போல பல தொண்டர்கள் சிறையில் உள்ளனர். 409 வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த பின் பாஜகவினர் மீது பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு முன்பாக கைது செய்கின்றனர்.

கைதான பாஜகவினர் மீது 80 சதவீத புகார் திமுகவினராலும், 10 சதவீதம் புகார் காவல்துறை மூலமும் கொடுக்கப்பட்டது. கைது செய்தவர்களை பேருந்தில் கூட்டி சென்று அதை பேசுபொருளாக்குகின்றனர். அவர்கள் வெளியில் வரும்போது தலைவர்களாகத்தான் வெளிவருவர். சிறையில் அதிக நபர்கள் இருக்கும் அறைகளில் அடைக்கின்றனர்.

இதுகுறித்து பேச வேண்டிய நேரத்தில் ஆக்ரோசமாக பேசுவோம். அதிகளவு கடன் வாங்கும் தமிழக அரசு அதை எப்படி காட்டுவோம் என்ற அறிக்கையை தரவில்லை. இந்த ஆண்டில் 70 ஆயிரம் கோடிக்கு குறைவில்லாமல் கடன் வாங்கப் போகின்றனர். எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக வருமான வரித்துறை இன்னும் எதுவும் கூறவில்லை.

வருமான வரித்துறையின் செய்திக்குறிப்பு வந்த பிறகு, அதுகுறித்து கூறுகிறேன். ஆனால், அவர் யார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அமலாக்கத்துறை சோதனைக்கு பாஜக காரணம் எனக் கூறும் மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்கள் புரிந்து பேச வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அஜித் பவார் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், தண்டனை அனுபவிக்க மாட்டார் எனக் கூற முடியாது. யாத்திரைக்கு எங்கிருந்து பணம் வந்தது என திருமாவளவன், ஜோதிமணி ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர். எஞ்சிய 131 தொகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் வந்து பாருங்கள்.

அந்தந்த தொகுதியில் இருப்போர் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திபோல நான் எல்லா பகுதியில் இருந்தும் ஆட்களைத் திரட்டி யாத்திரையை நடத்தவில்லை. பாஜக எழுச்சியை ஏற்க முடியாமல் இப்படி சொல்கின்றனர். ஆளுங்கட்சி மற்றும் ஆட்சியில் இருந்த கட்சியால்தான் தொழிலதிபர்களை மிரட்ட முடியும்.

நாங்கள் மிரட்டுவதாக கூற காரணம், எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதால்தான். அனைத்து கட்சி கரை வேட்டி அணிந்தவர்களும் பாஜக யாத்திரையில் பங்கேற்கின்றனர். தொழிலதிபர்கள் எங்களை ஆதரித்தாலும், நான் அதை தவறாக பார்க்கவில்லை. காரணம், நாங்கள் வளர்ச்சி அடைந்ததால்தான் எங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என அர்த்தம்.

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து ஜோதிமணி பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஜோதிமணி வழக்கு தொடர்ந்தால் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்பிக்கத் தயார். பெண்களை அவமதிக்கும் வகையில் நிதிஷ் குமார் பேசியதற்கு கனிமொழியும், தமிழக முதலமைச்சரும் ஏன் கருத்து கூறவில்லை என ஆச்சரியமாக உள்ளது.

கருத்து தெரிவித்தால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை நீக்கி விடுவார்கள் என்பதால் அமைதியாக இருக்கின்றனர். 'இந்தியா' கூட்டணி உருவான பிறகு திமுகவின் ஆபாச பேச்சு, அதில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் பரவிவிட்டது. போட்டிபோட்டு பேசுகின்றனர். சுய நலத்திற்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் வேலை செய்பவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால், மணல் குவாரி அதிபர்களிடம் நான் பணம் வாங்கியதாக கூறுகின்றனர்.

மணல் குவாரி அதிபரின் வீட்டில் அவர் தங்கி இருந்ததால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கும், மும்பையில் வசித்து வரும் தமிழரான மணல் குவாரி அதிபருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சனாதனத்தை ஒழிப்பதாக திமுக கூறியதால், பெரியார் சிலை தொடர்பாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறுகிறோம். அதிமுக ஆட்சியில் அதற்கான அவசியம் எழவில்லை.

முத்துராமலிங்கத் தேவர், வைத்தியநாத ஐயர் சிலைகள், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமியை நம்புபவர்கள்தான் கோயிலுக்குச் செல்வார்கள். 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில் முன்பாக பெரியார் சிலை வைப்போம் என்று கூறினார்களா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழி, வந்த பின்பு ஒரு வழி என்று திமுகவினர் செயல்படுகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலை வெளியிட்ட ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, சனாதனம் குறித்து உதயநிதி கருத்து கூறியதாக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். உலகில் சனாதனம் குறித்து பல பத்தாயிரம் புத்தகம் உள்ளது. ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட, ஒரு பேராசிரியர் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உதயநிதி கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவிய நீதிபதிகள்..! கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details