சென்னை:தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள் முன் திரண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாவே செல்வதாகவும், தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தார் பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார்
இதனிடையே தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சம் இல்லாமல் பாதுகாப்புடன் இருக்கின்றனர். இவர்களிடையே அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இப்படி பொய்யான செய்தி பரப்புவோர் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வட மாநில தொழிலார்கள் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், வதந்தி பரப்புதல் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல பிகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கில் கருத்துக்களை பதிவிட்டோர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான தகவல்களை பரப்பி வருவதாக கூறி அந்த ட்விட்டர் கணக்கை முடக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.
பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என தமிழ்நாடு அரசுக்கு சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க" - ஓபிஎஸ் வலியுறுத்தல்