சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் இல.கணேசன், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, நிர்வாகிகள் கரு.நாகராஜன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து இரண்டு மாதங்களுக்கு மேல் மக்களிடம் கருத்து கேட்டு வரப்பட்டுள்ளது. மும்மொழி கல்வி பொறுத்த வரையில், சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலேஷன் என பல பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இதே வசதி ஏழை மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஏழை மாணவர்கள் பிற மொழிகளை கற்பதை தடுக்கிறார். திமுக கட்சியினர் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் பிற மொழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு மட்டும் இது கிடைக்கக் கூடாது என அவர் எண்ணுகிறார். எனவே அரசு இதில் கவனம் செலுத்தி ஏழை மாணவர்களும் பல மொழி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.