சென்னை:ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பான செய்தியை மத சாயம் பூசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதே நேரம் ஆக்கிரமிப்பில் உள்ள கிறித்துவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என ஒருவர் பேசி பகிர்ந்த காணொலியை, தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரு முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது காவல்துறை தரப்பில், வினோஜ் செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டை தேர்தல் நடவடிக்கைகளுடனும், மதத்தை தொடர்புபடுத்தியும் விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல் சௌதாமணியின் டுவிட்டர் பகிர்வு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.