தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள பாஜக நினைத்ததை நிறைவேற்ற துடிக்கிறது - வைகோ

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றிபெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்துவிட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாஜக ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

வைகோ

By

Published : Jun 15, 2019, 12:21 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென்னக மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் பாஜக அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலையை மூர்க்கத்தனத்துடன் செய்துவருகிறது.

மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியை விரும்பும் மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வேத் துறையில் தகவல் பரிமாற்றத்திற்கு இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும், தமிழ் மொழியில் அறவே உரையாடக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுபோதாது என்று தற்போது மேலும் ஒரு கேடாக, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள், இந்தி மொழியில் வாக்கியங்களாக (Title) திரையில் இடம்பெற ஏற்பாடு செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தத் தகவலைத் தெரிவித்து இருப்பதுடன், இந்திய மொழியான ‘இந்தி’யைத் தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே “இந்திய மொழிகள்” என்பதை முதலில் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

‘இந்தி’ மட்டுமே இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவது, அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பது நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்குமே தவிர, இந்தி ஒருபோதும் ‘இந்தியா’வை ஒன்றிணைக்காது என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதைக் கவனப்படுத்துகிறேன்.தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details