சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பாஜக சார்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த மாதம் அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 652 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநில பாஜக தேர்தல் குழுத் தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஜனவரி.5) முதல் கமலாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு, துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள இடங்களுக்கான நேர்காணல் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட்டங்களில் நேர்காணல் நடைபெறுகிறது.
ஆளுநர் அப்படி இருக்க மாட்டார்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "இன்று முதல் மூன்று நாள் சென்னையில் நேர்காணல் நடைபெறும், மாநில தேர்தல் குழு எடுப்பதே இறுதியான முடிவு" என்றார். ஆளுநர் உரை குறித்துப் பேசிய அவர், "அரசு கொடுக்கும் விவரங்களைச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். தமிழ்நாடு அரசு நினைப்பதைத் தான் ஆளுநர் பேசுகிறாரா என்ற கேள்விக்கு, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக ஆளுநர் இருக்க மாட்டார்.
தமிழ் மாணவர்கள் விரும்பும் மொழிகளைப் படிக்க வசதி செய்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமை . இல்லை என்றால் அது மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல். தமிழ்நாடு மாணவர்களை ஒவ்வொரு முறையும், நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி விடுவோம் என ஏமாற்றாதீர்கள். கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தியதில் பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்நாடும் சிறப்பாகச் செயல்பட்டது'' என்றார்.
பாஜக அதிமுக கூட்டணி
பாஜக - திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, "காலம் தான் பதில் சொல்லும்" எனப் பதில் அளித்தார்.