தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்கள் செயல்பட்டால்.. பொன்.ராதாகிருஷ்ணனின் பொங்கல் வாழ்த்து!

சென்னை: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மக்கள் செயல்பட்டால் தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாட்டை போற்றுகின்ற வகையில் ஒரு மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும் என்று பொன். ராதாகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்துக் கூறியுள்ளார்.

By

Published : Jan 13, 2020, 8:21 PM IST

பொன்னாரின் பொங்கல் வாழ்த்து  bjp pon radhakrishnan pongal greetings  பாஜக  தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்து
பொன்.ராதாகிருஷ்ணனின் பொங்கல் வாழ்த்து

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்," அன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.

இந்தப் பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் குதூகலம் குலுங்கவும் இறைவனுடைய அருள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிட்டுகின்ற வகையிலும் அன்னை பராசக்தி அருள் புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

இந்தப் பொங்கல் திருநாளை நீங்கள் கொண்டாடும் போது, உங்கள் குடும்பத்தினருடைய முன்னேற்றத்திற்காக, தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காகவும், இந்திய திருநாட்டிற்காகவும், நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாடு ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான ஒரு நிர்வாகத்தை காணவேண்டும். இந்திய அளவில் பிரதமர் மோடி எடுத்து வருகின்ற நாட்டிற்கான, தமிழர்களுக்கான முன்னேற்றத்திற்கு இறைவனுடைய அருள் கிட்ட வேண்டும்.நாம் அதற்கு பிரதமரருக்கு துணையாக இருக்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம், தமிழினுடைய முன்னேற்றத்திற்காக, தமிழருடைய முன்னேற்றத்திற்காக, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான விஷயங்களை நமக்காக செய்திருக்கின்றனர்.

குறிப்பாக பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலகறியச் செய்ய கூடிய வகையில் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச் சபையில் பேசியதாக இருந்தாலும் சரிதான், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறியாத இந்தி பேசுகின்ற மாணவர்கள் மத்தியில் பேசும்போதாக இருந்தாலும் சரிதான், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போதாக இருந்தாலும் சரி தான், எல்லா இடத்திலும் அவர் பேசத்தவறாத ஒன்று, பேசிக்கொண்டே இருந்த ஒன்று, தமிழை எல்லோரும் பயிலுங்கள், உலகத்தின் முதுமொழி, உலகத்திலேயே மிகப் பழமையான மொழி, சமஸ்கிருதத்தை விட பழமையான மொழியான தமிழை இந்தியா பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து இந்தியர்களும் தமிழைப் படிக்க வேண்டும் என்று சொன்னவர் பிரதமர் மோடி.

தமிழர்கள் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ்ச் சொந்தங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் . உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழர்களுக்காக, அவர்களோடு கலந்து பேசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாம் இந்தப் பொங்கல் திருநாளை ஜல்லிக்கட்டோடு கொண்டாடுகின்றோம் என்று சொன்னால், அதற்கு அடிப்படைக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி. திமுக, காங்கிரஸ் கூட்டணியின் அரசாங்கம் பாரம்பரியமான தமிழர்களுடைய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்தார்கள். மக்கள் மிக வேதனைப்பட்டார்கள்.

அதற்குப் பின்பாக பிரதமர் மோடியின் அரசாங்கம் வந்த பின்பு, அந்த அரசின் இணையமைச்சர் என்கின்ற முறையில், நம்முடைய தமிழர்களின் பாரம்பரியமான இந்த விளையாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டேன். பிரதமர் நரேந்திர மோடியினுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்துகின்ற உரிமையை பிரதமர் நரேந்திர மோடி நமக்குத் தந்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது இந்த ஜல்லிக்கட்டு போட்டியைத் தடை செய்த காங்கிரஸிடம் இருந்து மீட்டு, மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தமிழர்களுக்கு தந்தப் பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும் என்பதை மனதில் கொண்டு, இந்த பொங்கல் விழாவை நாம் கொண்டாடவேண்டும். மனதோடு பேசுகிறேன் என்கின்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் தமிழர்களின் பொங்கல் விழாவை குறிப்பிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் என்பதும் தற்போது தமிழர்களுக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டு இருண்ட காலமாக இருந்த நிலை மாறி, இனி வருகின்ற 2021ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான மாற்றங்கள் தமிழ்நாட்டிலே உருவாகவும், நேர்மையான நிர்வாகம் அமைவதுடன் நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள், தமிழ்ச்சமுதாயம் மாபெரும் வளர்ச்சியும், எழுச்சியும் பெற்று கோலோட்சிகின்ற நிலையில் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்துகின்ற வகையில் அமைய வேண்டும் என்றும் நாம் பிரார்த்திப்போம். அதற்காக உழைப்போம்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு மக்கள் செயல்பட்டோம் என்று சொன்னால், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும், தமிழ்ச் சமுதாயமும் உன்னத நிலையை அடைகின்ற வகையிலும், உலகிலேயே பழமையான நமது தமிழ் மொழி, நம்முடைய கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாம் போற்றுகின்ற வகையிலும் ஒரு மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்.

அதற்கு நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு நம்முடைய பணிகளைத் துவக்குவோம். இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழ்நாட்டிற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வாழ்த்தி அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்" இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி

ABOUT THE AUTHOR

...view details