சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்விற்காகவும், செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னை முழுவதும் விளம்பரப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை - நேப்பியர் பாலத்தை செஸ் போர்டுபோல மாற்றியது முதல் ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் தம்பி உருவத்தை அச்சடித்து விநியோகம் செய்வது வரை அரசு சார்பில் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விளம்பரப்பதாகைகளில் பிரதமரின் புகைப்படம் இல்லை என பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இதனிடையே தமிழ்நாடு பாஜகவில் முக்கியப்பொறுப்பு வகிக்கும் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பதாகைகளில் பிரதமரின் படத்தினை ஒட்டி, ஆளும் திமுக அரசு பிரதமரின் படத்தை விளம்பரப்பதாகைகளில் வைக்காமல் விட்டுத் தவறு செய்ததால் தாங்கள் அப்படத்தினை ஒட்டுவதாக வீடியோ வெளியிட்டார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு வைத்துள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பதாகைகள், விழிப்புணர்வு போஸ்டர்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் எனக் கட்சித்தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.