பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜ், பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி திரிபாதியை சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் டிஜிபியை சந்தித்துவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே பாஜக நிர்வாகிகள் அங்கு வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெற்றிவேல் யாத்திரை 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்குகிறது. அதற்காக அனுமதி கேட்டு ஏற்கனவே டிஜிபியிடம் மனு கொடுத்தோம். அதனை நினைவூட்டும்விதமாக இன்று (அக்டோபர் 30) மீண்டும் சந்தித்துள்ளோம்.
எங்களின் உரிமையை தடுக்க திருமாவளவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. யாத்திரையின்போது 60 இடங்களில் பாஜக தலைவர் முருகன் பொதுமக்களிடையே பேச உள்ளார். தமிழ்நாட்டை மீட்டு எடுக்கும் இந்த யாத்திரை அரசியல் மாற்றத்தை தரும்.