சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று(ஏப்ரல் 5) அவர் புகைப்படம் பொருத்திய உறுப்பினர் அட்டை விண்ணப்ப படிவத்தை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கினார். ஏற்கனவே திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக சார்பாகவும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரையில் முதலில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுகிறது. இந்த உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மிக வேகமாக செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அறியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உறுப்பினர் அட்டை விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.