ஹைதராபாத்:கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடி அனுமதி அளிக்க வேண்டும், மாதவிடாயை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு இந்த தீர்ப்பை கேரள அரசு வரவேற்றது. தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. ஆனால், இந்து மத அமைப்புகள், பாஜக மற்றும் ஐயப்ப பக்தர்கள் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முயன்றபோது பாஜகவினர் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரள அரசால் இந்த தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை. அதன் பிறகு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்குச் செல்ல சில பெண்கள் முயற்சித்தபோதும், பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். விரதம் இருந்து மாலை போட்டு, வட கோவையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டு, கடந்த 16ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட்டார்.