சென்னை:அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,"பத்திரப்பதிவுத் துறையில் நில மாஃபியா குறித்து, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் சுமார் ரூ.100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி உள்ளோம்.
மீனாட்சி அம்மன் கோயில் நிலம் மோசடி: மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8 ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பத்திரபதிவுகளில் இளையராஜா ஈடுபடுகின்றார். 10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021 ஜூலை 2-ஆம் தேதி அன்று பொது அதிகார பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்த பத்திரப்பதிவை சார்பதிவாளர் அனந்தராமன் செய்கிறார். மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021 ஜூலை 19-ஆம் தேதி பதிவு செய்கின்றனர். இந்த பத்திரப்பதிவை சார்பதிவாளர் பிரஷாந்த் சந்தான கருப்பன் பதிவு செய்கிறார்.
அடுத்தடுத்து மோசடி பத்திரப்பதிவு: இதில் இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார், மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்கின்றனர். அதாவது கோவில் நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கின்றனர். இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 2022 ஜூன் 29 ந் தேதி சுற்றறிக்கை அனுப்புகிறார்.
அதில் தெளிவாக இந்த பத்திரப்பதிவு மோசடி என்று குறிப்பிடுகிறார். நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம் அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா அல்லது கோவில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அது சரிபார்க்கபடவில்லை. இரண்டாவது பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது.
விதிபிரிவு 28 இன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை நிலத்திற்கு திருநெல்வேலியில் பத்திரப்பதிவு: இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி பத்திர பதிவை பெரிய அளவில் செய்ய களமிறங்குகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள்.
விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார்.
பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா city civil நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், பாஜக கட்சியை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கின்றனர்.