புதுக்கோட்டை:பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று (ஜூன் 9) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "கடந்த 15 தினங்களுக்கு முன்பு எனது சமூக வலைதள பக்கத்தில் என்னையும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் விரைவில் கொலை செய்வோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு புகார் மனு நானே நேரடியாக சென்று அழைத்தேன். ஆனால் மனு மீது நகர காவல் நிலைய போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் அளித்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோரை கொலை செய்து விடுவதாக சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறி உள்ளது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை மாறிவிட்டது.
திமுகவிற்கு எதிராக பாஜக பிரமுகர்கள் ஏதாவது பதிவிட்டால் உடனடியாக அவர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தன்னையும் கொலை செய்து விடுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. இதிலிருந்தே காவல்துறை ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
திமுக ஆட்சியில் கஞ்சா கொடி கட்டி பறக்கிறது போதை பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்று தமிழக முதல்வர் உரிய கண்காணிப்பை செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக ஐடி விங் பக்கத்தில் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததோடு வீச்சறிவாளை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிடுகின்றனர்.
அதனை முதல்வருக்கும் டேக் செய்துள்ளனர். இதன் பிறகும் காவல்துறை அங்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகளுக்கும், திமுக பிரமுகர்களுக்கும் காவல்துறை பக்க பலமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஆளுநர் தமிழகத்தின் முதல் குடிமகன். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து அவர் நிச்சயமாக பேசுவார் கருத்து கூறுவார்.