சென்னை: விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர், தினகரன் (48). இவர் பாஜக-வின் 136ஆவது வட்டத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கேகே நகர் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் தன்னை தாக்கி சாதியைப் பற்றி இழிவாக பேசியதாகப் புகார் அளித்துள்ளார்.
புகாரில் நேற்றிரவு (அக்.22) கே.கே. நகரில் உள்ள தனது நண்பரைச் சந்திக்க காரில் சென்றபோது, திமுக உறுப்பினர் சுரேஷ் என்பவர் தன் காரின் மீது இருசக்கர வாகனத்தால் மோதிவிட்டு தன்னிடம் பிரச்னை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்போது சுரேஷுக்கு ஆதரவாக திமுக 136ஆவது வட்டப்பகுதி பிரதிநிதி பாபு என்பவர் வந்து தங்களுடைய ஏரியாவிற்கு வருவதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனவும்; தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன்னை சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சாதியை இழிவாகக் கூறி தன்னை தாக்கிய திமுக பிரமுகர்களான பாபு மற்றும் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக பிரமுகர் அளித்தப் புகாரின் பேரில் கே.கே. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆன்லைனில் விஷம் வாங்கிக்குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை!