சென்னை: அடையாறு அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சோலை முத்து(35). இவருக்கு தேவி என்ற மனைவியும், 12 வயதில் மகளும் உள்ளனர். சோலைமுத்துவிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அடையாறு முத்துலட்சுமி பூங்காவிற்கு தனது மகளை அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் தனது மகளை சோலைமுத்து அழைத்துக்கொண்டு பூங்கா எதிரே சாலையைக் கடக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் வருவதைக் கண்ட சோலைமுத்து, தனது மகளை தள்ளிவிட்டு காப்பாற்றினார்.
பாஜக பிரமுகரின் சகோதரர் ஓட்டி வந்த கார் மோதி ஒருவர் படுகாயம்! - BMW car accident
சென்னையில் பாஜக பிரமுகரின் சகோதரர் ஓட்டி வந்த சொகுசு கார் மோதி சோலைமுத்து என்பவருக்குப் பலத்த காயம் பிறந்தநாளை ஒட்டி தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டது
![பாஜக பிரமுகரின் சகோதரர் ஓட்டி வந்த கார் மோதி ஒருவர் படுகாயம்! பாஜக பிரமுகரின் சகோதரர் ஓட்டி வந்த கார் மோதி ஒருவர் படுகாயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15460225-thumbnail-3x2-accdnt.jpg)
இருப்பினும் சோலைமுத்துவின் மேல் கார் மோதியது. இதில் இரண்டு கால் மற்றும் அவரது தொடை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் படுகாயமடைந்த சோலைமுத்துவை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தியபோது, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் ரேவந்த்(26) என்பதும், இவர் ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வத்தின் மகனும், பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வத்தின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.
விபத்தில் காயமடைந்துள்ள சோலைமுத்துவின் மனைவி தேவி கூறுகையில், "விபத்தை ஏற்படுத்திய பிறகு ரேவந்த் வழக்கறிஞர்களுடன், வந்து வழக்கு ஏதும் போலீசாரிடம் கொடுக்கவேண்டாம் என சொன்னார்கள். மருத்துவத்திற்கான ஆகும் செலவை தருவதாகவும் கூறி புகார் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கணவர் சோலைமுத்து இரண்டு கால்களிலும் பலத்த காயம் அடைந்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. கணவருடன் சென்ற தனது 12 வயது மகளுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். குழந்தைகளை எப்படி படிக்க வைக்க உள்ளேன் என்பது தெரியவில்லை" என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கணவர் முருகனுக்கு பரோல் கோரி நளினி மனு - சிறைத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!