சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஜன.12) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளுநர் உரையில் மொழி, கலாசாரம், பண்பாட்டை பேணி காப்பதாக சொன்னதை வரவேற்கிறேன். அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதையும் வரவேற்கிறேன். பிரதமர், காசி பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஏற்பாடு செய்ததையும், காசி தமிழ் சங்கம், ஐநா சபையிலும் தமிழில் கருத்துகளை கூறுவதையும் இங்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆளுநர் உரையில் கரோனா வைரஸ் வந்தவுடன் கோவாக்சின், கோவிஷீல்டை தமிழ்நாட்டிற்கு வழங்கிய பிரதமருக்கு நன்றி கூறியிருக்கலாம். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை மாநில அரசு மீட்டதாக கூறப்பட்டிருந்தது. மத்திய அரசால்தான் மீட்டிருக்க முடியும். மாநில அரசு மட்டும் செய்ய முடியாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஏற்காததால் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.