யூ- டியுபர் கிஷோர் கே.சாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் முன்னாள் முதல்வர்களை பற்றி இழிவுப்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 10ஆம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கே.கே. நகரில் வீட்டில் வைத்து கிஷோர் கே.சாமியை நேற்று (ஜூன். 14) அதிகாலையில் கைது செய்தனர்.
கைதான கிஷோர் மீது 153 கலகம் செய்ய தூண்டி விடுதல், 505 (1) (b) பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 505(1)(c)- ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திற்கு எதிராக குற்றச்செயலை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் கிஷோரை தாம்பரம் நீதிமன்ற நடுவர் அனுபிரியா முன்பு வைத்தனர். வருகிற ஜூன் 28 ஆம் தேதி சிறையில் அடைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், மாதவரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுச் சென்று ஆஜர் படுத்தினர்.
முன்னதாக, கிஷோர் கே.சாமிக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு கிளைச்சிறையிலிருந்து செங்கல்பட்டு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி கிஷோர் கே.சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததார். இதனால், அவரை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.