நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினருக்கிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மேலும், கல்யாணராமன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை, தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டதால், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முக்கியத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதால், சென்னை சிட்லப்பாக்கத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2017, 2018ஆம் ஆண்டுகளில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்தும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது
முன்னதாக அவர் ஜனவரி, 2021 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறாகப் பேசி பொதுமக்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், பிப்ரவரி மாதம் 2021ஆம் ஆண்டில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், கல்யாண ராமன். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்தானது. அதன் பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்யும்போது 'மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துப் பதிவிட மாட்டேன்’ என நீதிமன்றத்தில் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.
பிணையில் வந்த பின்பும் சர்ச்சைக் கருத்துகள் பதிவு
அதனடிப்படையில் பிணையில் வெளிவந்த பிறகும் அரசியல் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாக கருத்துப் பதிவிட்டு வந்ததாலும், பிராமணப் பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளத்தில் தொடர்ந்து கருத்துப்பதிவிட்டதாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் என்பவர், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில், அதன் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
நள்ளிரவில் கைது
கைது செய்வதற்கு முன்பு வரை, தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பல பேர் பற்றிய தவறான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், பாஜக பிரமுகர் மீது கண்டனங்களும் எழுந்தன.