சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்திற்கான நெருக்கடியை ஏற்படுத்தும். இதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றபடவில்லை.
ஒரு மாநில அமைச்சர் அமலாக்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு தருவேன் என்ற பிறகும் அடிப்படை உதவிகள் கூட வழங்காமல் 18 மணி நேரத்திற்கும் மேலாக வைத்து கொடுமை செய்துள்ளார்கள். மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவது போல தமிழ்நாட்டிலும் முயற்சிக்கிறார்கள்.
சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகியன பாஜகவின் கிளை அமைப்புகளாக செயல்படுகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்பது ஒரு ஜனநாயக படுகொலை, பாஜகவின் சர்வாதிகார அரசியலின் வெளிப்பாடு, மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சம் தான் இந்த கைது நடவடிக்கையாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை அமலாக்கத்துறை செயல்படுத்த முயற்சிக்கிறது.
நேற்று அதிகாலை தொடங்கி நள்ளிரவை தாண்டியும் அவரை ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் உடல்நிலை பாதிக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் எஜமான்கள் மோடி மற்றும் அமித்ஷாவை திருப்திபடுத்தும் கேடு கெட்ட செயலை செய்திருக்கிறார்கள்.
அதிமுகவையும் மிரட்டும் பாஜக: இந்த நடவடிக்கையின் மூலமாக திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் மிரட்ட முயற்சிக்கிறது பாஜக. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு ‘உன்னையும் கைது செய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறது பாஜக.
எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக தான். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்த போதும் திமுக தான் எதிர்த்துக் குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எந்தக் காலத்திலும் பாஜகவின் எந்த விதிமீறலையும் எதிர்த்து குரல் எழுப்பாது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தலைவர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது பாஜக. ஆனால், திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாத நிலையில் திண்டாடும் பாஜக, மக்கள் மத்தியில் பரப்பும் பொய் பிரசாரத்திற்கு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை நடத்துவதை செய்கிறது.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் பாஜகவின் பதற்றமும்:வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை வெற்றிகரமான கட்டத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நகர்த்தியிருக்கிறார். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் திமுக தலைவர் பங்கேற்க உள்ளார். அவருடன் 25 தலைவர்கள் ஆலோசனை நடத்தி வியூகம் வகுக்க உள்ளனர். அதனால் அபரிமிதமான பதற்றத்தில் தவிக்கும் பாஜக அமலாக்கத்துறை மூலம் நேரடியாக மிரட்டும் வேலையை செய்கிறது.
அமலாக்கத்துறையும் பழிவாங்கும் நடவடிக்கையும்:இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றங்களை கண்டறிவதில் தான் அமலாக்கத்துறை கவனம் செலுத்தி வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எதிர்க்கட்சிகளின் மீது ஏவி பயம் ஏற்படுத்துவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது 2015ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு ஆகும். இதன் மூல வழக்கு CCB (CHENNAI CRIME BRANCH) உடையது.
இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு அரசு வேலைக்கு பணம் பெற்றார் என்பது தான் புகார். ஆனால் புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப் பெற்றுவிட்டனர். அமைச்சர் நேரடியாக பணம் பெற்றாரா என்றால் இல்லை. புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப் பெற்றவுடன் இதில் அமலாக்கத்துறை எப்படி? ஏன் வந்தார்கள்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை மட்டும் குறிவைத்து சோதனை: டெல்லி ஆம் ஆத்மி அரசில் முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை வகித்த சத்யேந்திர ஜெயின்னை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ மூலம் வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது பாஜக. டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் சிபிஐ விசாரணை என எதிர்கட்சிளை குறிவைக்கிறது பாஜக.