சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து இல்லாத பல முன்னேற்றங்கள் இப்போது கண்டுள்ளது. பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள் கோயில் பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்ற புகாருக்கு பின் தான் இந்த துறை உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோயில்களிலும் உள்ள குறைகளை பதிவு செய்ய சொல்லி அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில் சான்றோர்கள் சார்ந்த திருப்பணிகள் பணியும் நடக்கிறது. குறிப்பாக 200 உலோக சிலைகள், 100 கற்சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன, அது யார் கைக்கு போகிறது என்று தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பது போல மத்திய அரசு காய் நகர்த்துகிறது. இதுவரை செய்யப்படாத பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சி அமைந்த பின் தான் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்துள்ளது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல.
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கம் வராது என்ற நம்பிக்கை இழந்த காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பாஜகவினர் பரப்புகின்றனர் எனவும், 8001 கோயில்களுக்கு மாநில தொல்லியல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எல்லாம் 1000 கோயில்களுக்கு தான் கிடைக்கும்.