சென்னை:மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய – மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க இரட்டை வேடம் போடக் கூடாது என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக நீதிக்கு எதிரான ஒன்றிய அரசு..!
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் , அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா? என்ற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. இவ்வழக்கில் ஒன்றிய அரசும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து வாதிடுகிறது. இது வருத்தமளிக்கிறது. ஒன்றிய அரசின் நிலைபாடு சமூக நீதிக்கும் ,ஏழை எளிய மாணவர்களின் நலன்களுக்கும், கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரானதல்ல. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மருத்துவ இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் ஒரு குழுவை கடந்த அ.இ.தி.மு.க அரசு அமைத்தது. அக்குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும், நியாயத்தையும் நீதியரசர் கலையரசன் குழு பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து உறுதிபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க அரசு , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை மருத்துவம், பல்மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
காலதாமதம் செய்யும் ஆளுநர்
ஆளுநர், சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவதாகக் கூறி, ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்தார். அதனால் அ.இ.அ.தி.மு.க அரசு இந்த ஒடுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது. பின்னர் ஆளுநரும் இச்சட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.அதன் பின்னரே இந்த ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. முறையான சட்ட ஆலோசனை பெற்ற பின்னரே ஆளுநர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். எனவே, இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானது என்ற வாதம் சரியல்ல.
கல்வி நிறுவன அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது புதிதல்ல. ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் இளநிலை மருத்துவம் (MBBS) பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில்(MD/MS) தனி இட ஒதுக்கீடு உள்ளது. அதாவது, ‘அந்த நிறுவனத்தில் படித்தவர்களுக்கு’ என்று தனி இட ஒதுக்கீடு (Institutional Quota) நடைமுறைப்படுத்தப்பட்டது. இது நீண்டகாலமாக உள்ளது. ஜிப்மர் நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி நிறுவன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.
தற்பொழுது ஒடிசா மாநில அரசும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் இட ஒதுக்கீட்டை, அதுவும் 15 விழுக்காடு வரை வழங்குகிறது. எனவே, சட்டரீதியான எதிர்பார்ப்பு கோட்பாடு (Doctrine of Legitimate Expectation ) என்ற அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் சில வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
மாநில உரிமையை பறிக்கும் செயல்
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு திணித்தது. இந்தத் திணிப்பு மாநில அரசின் உரிமைகளுக்கும்,
சமூக நீதிக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசின் தரப்பில், மக்களின் தரப்பில் வாதங்களை முன்வைத்த பொழுது, ஒன்றிய அரசின் அமைச்சர்கள் இது மாநில உரிமைகளையும், சமூக நீதியையும் பாதிக்காது என்றனர்.
ஒன்றிய அரசு நீட் தேர்வை நடத்தி, மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கும். மாநில அரசுகள் ,அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கைகளை நடத்திக் கொள்ளலாம். எனவே, மாநில உரிமையோ ,இட ஒதுக்கீடோ பாதிக்கப்படாது என உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
அந்த உறுதி மொழிகளை மீறி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தனி இடதுக்கீடு மருத்துவக் கல்வி தரத்தை பாதிக்கும், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை பாதிக்கும், நீட் தேர்வின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என தற்பொழுது ஒன்றிய அரசு வாதிடுவது வருத்தத்தை அளிக்கிறது.
வேடிக்கையாகவும் உள்ளது. அவர்கள்அளித்த வாக்குறுதிக்கே எதிராக உள்ளது.
பாதிப்பு இல்லை
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுகீட்டில் , நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே சேர்க்கபடுகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர இயலாது. அது மட்டுமல்ல , இந்த இடங்களை நிரப்புவதற்காக மாநில அரசு நீட் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைப்பதுமில்லை.
இரட்டை வேடம் போடும் பாஜக..! - டாக்டர்கள் சங்கம் கண்டனம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்
படுகிறார்கள். எனவே, மருத்துவப் படிப்பின் தரம் பாதிக்கப்படும், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என்ற வாதத்திற்கே இடமில்லை.
ஒன்றிய அரசுதான் தனியார் கல்லூரிகளில் தரத்தைக் குறைக்கிறது. ஒன்றிய அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்கள் காலியாகப் போய்விடக்கூடாது என்பதற்காக, மாணவர் சேர்க்கையின் இறுதி நிலையில் நீட் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைத்துவிடுகிறது. அதே போல், கடைசி நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களே நேரடியாக மாணவர் சேர்க்கையை மாப் அப் ( Mop up ) கவுன்சிலிங் மூலம் நடத்திக் கொள்ள அனுமதிக்கிறது.
இதன் காரணமாக நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று இருந்தாலும், அதிக வசதி படைத்த மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற்று
விடுகின்றனர். அதே சமயம் அவர்களை விட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மிக அதிகமான கட்டணத்தை செலுத்த முடியாத, பணவசதி இல்லாத மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற இயலாமல் தவிக்கிறார்கள்.
இது தரம், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிராக உள்ளது. பணம் என்பதே மருத்துவ இடத்தை பெறுவதற்கானத் தகுதியாக மாறிவிடுகிறது. தர அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டால் தரம் போய்விடும் என்பது நகைப்பிற்குரியது.
உண்மையிலேயே தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திட ஒன்றிய அரசு உறுதிகாட்ட நினைத்தால், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையைக் கடைசி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே நடத்திட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு உறுதிகாட்ட வேண்டும். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கடைசிவரை நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட அனுமதிக்கக்கூடாது. தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் நலன்களுக்காக நீட் கட் ஆஃப் பர்சென்டைலை ( NEET CUT OFF PERCENTILE) கடைசி நேரத்தில் குறைத்திடக் கூடாது.
இரட்டை வேடம்
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள், திரு.அண்ணாமலை, திரு.ராகவன் போன்றோர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரினர். ஆனால் பா.ஜ.க கல்வித்துறை செயலாளர் திரு.நந்தகுமார், அனுமதி வழங்கக் கூடாது எனக் கடிதம் எழுதினார். இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவக்கல்லூரியில் சேருவதைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் பாராட்டிப்பேசி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆரம்பம் முதலே வாதிட்டு வருகிறது. இது பா.ஜ.க வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நீட் தேர்வு காரணமல்ல. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் அதிக அளவில் அரசுப்பள்ளி மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிறார்கள். இதற்கு நீட் தேர்வுதான் காரணம் என உண்மைக்கு மாறான கருத்தை பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகிறார்கள். இது தவறான வாதம்.இது கண்டனத்திற்குரியது.
உண்மையில் நீட் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு, அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவது 1 விழுக்காட்டிலிருந்து 0.1 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில் தவறில்லை.
அரசு மருத்துவர்கள் தொடர்ந்து மழை, வெள்ளம், புயல்,கரோனா, டெங்கு, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பேரிடர் காலங்களில் தொடர்ச்சியான பணியினால் தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையுள்ளது. அதே போன்று, அரசு மருத்துவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்வதை ஊக்கப்படுத்தவும், கிராமப்புற மக்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு படித்த அரசு மருத்துவர்களின் சேவை கிடைப்பதை உறுதிப் படுத்தவும் , முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு (Service quota) வழங்கிட உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி ரீதியில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்
அது மட்டுமல்லாமல் கடினமானப் பகுதிகளில், மலைப்பகுதிகளில் வேலை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் மதிப்பெண்ணுடன் சேர்ந்து கூடுதலாக ஊக்க மதிப்பெண்களை வழங்கவும், MCI PG Medical Education Act 2017 amendment மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள டி.என்.பி மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு (PG DIPLOMA, DNB GOVERNMENT HOSPITAL SEATS) 100 சதவீத இட ஒதுக்கீடும், டிப்ளோமா இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
அதே போன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஏனெனில், நீட் தேர்வை எதிர் கொள்வதில் அரசு மருத்துவர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை அரசுப் பள்ளி மாணவர்களும் எதிர் கொள்ளுகிறார்கள். அனைவருக்கும் கல்வி ஒரே மாதிரியாக இருக்கும் போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு சலுகை ஏன் வழங்க வேண்டும்? அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளதாக நீதியரசர் கலையரசன் குழு அறிக்கை கூறுகிறது.
அதற்கு அவர்களின் வாழ்நிலையும், குடும்பப் பொருளாதார மற்றும் கல்வி நிலையும் காரணம் என அவ்வறிக்கை கூறுகிறது. அரசு நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் , பொருளாதார காரணங்களால் அறிதல் திறனில் பின்தங்குதல், பெற்றோரின் வேலை , கல்வித் தகுதி , பெற்றோரின் வருமானம்,
வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை உருவாக்கும் உளவியல் தடை, அக்குழந்தைகளின் உளவியல் போன்ற பல்வேறு காரணிகளால் அவர்கள் தனி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
அவர்களின் கல்வி பெறும் திறனை பாதிக்கும் சூழ்நிலைகள், அப்பள்ளிகளுக்கு வெளியேவுள்ளது எனவும் நீதியரசர் கலையரசன் குழு கூறியுள்ளது. எனவே, கல்வி ஒரே மாதிரியாக இருந்தாலும் அக்கல்வியை பெறுவதிலுள்ள சூழல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக, சமவாய்ப்புடையதாக இல்லை. ஏற்றத்தாழ்வாகவே உள்ளது.
அடித் தட்டு சமூக மாணவர்கள் தான் அதிகம்..!
மேலும் அரசுப் பள்ளிகளில் 85 விழுக்காடு பள்ளிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஒட்டு மொத்தப் பள்ளிகளில் 73 விழுக்காடு பள்ளிகள் அரசுப்பள்ளிகள் தான். அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் தமிழ்வழியில் படிக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 3 % எஸ்.டி , 6% எஸ்.சி ( எ) ,26 % எஸ்.சி , 37 % எம்.பி.சி, 23% பி.சி, 4% பி.சி(எம்) மாணவர்களாக உள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களில் அடித்தட்டு சமூக மாணவர்கள் தான் அதிகம்.
முன்னேறிய வகுப்பு மாணவர்களில் 1விழுக்காடு மட்டுமே அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். எனவே, சாதி ரீதியாக மிகவும் அடித்தட்டில் உள்ளவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தந்தைமார்களில் 83 சதவீதம் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். அம்மாணவர்களின் பெற்றோர்களில் மிகப் பெரும்பாலோர் பட்டப் படிப்பு படிக்காதவர்கள். அவர்களின் கல்வித் தகுதி மிகவும் குறைவானதாகும். இது போன்ற பல்வேறு விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசிடம் டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், இதன் மூலம் பயன் பெறும் மாணவர்கள் சமூக ரீதியிலும்,கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிக ,மிக பின்தங்கியவர்களே ஆவர். எனவே, இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட வேண்டும். மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை காப்பாற்றத் தவறினால் இதர தொழிற் படிப்புகளிலுள்ள 7.5 % இட ஒதுக்கீட்டையும் இழக்கும் நிலை ஏற்படும். நீட் விலக்கு பெற்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்.
அதன் மூலம் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகளில் , தொழிற் கல்லூரிகளில் சேர முடியும்.
எனவே, இந்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்திடும் வகையில் , நீதியரசர் கலையரசன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து வாதிட வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்