தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் ’வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டவும், ஒரு லட்சம் இல்லங்களுக்கு ’கந்த சஷ்டி கவசம்’ புத்தகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 1) முதல் தமிழ்நாடு முழுவதும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று ’வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். அதேபோல் ’கந்தசஷ்டி கவசம்’ புத்தகங்களையும் வழங்கினார்கள். இதனை பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் ப.செல்வம், சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் உள்ள வீடுகளில் வெற்றிவேல் வீரவேல் ஸ்டிக்கரை ஒட்டி தொடங்கிவைத்தார். அதேபோல் கந்த சஷ்டி கவசம் புத்தகங்களையும் அவர் வீடுவீடாக சென்று வழங்கினார்.