சென்னை: புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரான கிருஷ்ணசாமி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலின்படி, கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அய்யர் கோவில்பட்டியிலும் போட்டியிடுவது தெரியவந்துள்ளது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, "முதல்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்த விவரம் அடுத்ததாக வெளியிடப்படும் இரண்டாம்கட்டப் பட்டியலில் தெரியும்.
பாஜக வேளாளர் குல மக்களை ஏமாற்றிவிட்டது கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தமிழ்நாட்டில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, மாநில அளவில் மிகப்பெரிய வலுவான மாற்றத்தை கொண்டுவரும். இது மாநிலத்தில் அனைவருக்குமான கட்சியாகச் செயல்படுகிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே வலுவான கோரிக்கையை எழுப்ப முடியும். கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்டம்கூட கூட்டணிக் கட்சியினர் நடத்தவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணியின் தலைமையிலிருந்து எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. இதனால்தான் தனித்துப் போட்டியிடுகிறோம். தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் இனத்திலிருந்து மாற்ற வேண்டும் என்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். இதற்காகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்துவருகிறோம்.
இந்தத் தேர்தலில் பட்டியல் இன பிரிவிலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நோக்கமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் மாற்றம் செய்துள்ளோம். ஆனால் அவர்கள் அதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசெல்ல எந்தவித உறுதிமொழியும் அளிக்கவில்லை. அவ்வாறு உறுதிமொழி அளித்தால் தேர்தலில் போட்டியிடாமலும் ஆதரவு தருவதாக அறிவித்திருந்தேன்.
வெளிப்படையான உறுதிமொழியினை மட்டுமே கோரியிருந்த நிலையில், அவர்கள் செவிசாய்க்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் செய்த தவறை மீண்டும் செய்து 100 ஆண்டுகள் பின்னே செல்ல விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "மக்களுக்கு இலவசங்கள் அளிக்கக் கூடாது. அதற்கு பதில் அவர்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். புதிய தமிழகம் தனது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை வெளியிடும்" என்றார்.