சென்னை: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ- வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? எனக் கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர், மனுதாரருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதில் இருந்து கண்ணுக்கு தெரியாமல் இந்த வழக்கில் பா.ஜ.கவின் பங்கு இருப்பது தெளிவாகிறது என்றார்.
அனைவருக்கும் நாத்திகத்தை பின்பற்ற உரிமை உள்ளது. சமூக நலம், சீர்திருத்தங்கள் பற்றி பேசவும் உரிமை உள்ளது. உதயநிதி தனிப்பட்ட முறையில் தான் பேசினாரே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். தகுதியில்லாமல் பதவி வகித்தால் மட்டுமே எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்ய முடியும்.
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே தகுதி இழப்பு ஆகின்றனர். ஆனால் உதயநிதி எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என மனுதாரர்கள் கூறிய போதும், எந்த முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் உதயநிதி பதவியில் நீடிக்க தகுதி உள்ளது. அவர் பதவியில் நீடிக்க ஆளுநர் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அப்படி அதிருப்தி தெரிவிப்பதாக இருந்தால், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனவும், முதலமைச்சரின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ? வேறு எந்த சட்டத்திலோ? எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். முன்னாள் குடியரசு தலைவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக யார் குரல் கொடுப்பார் என தெரிவித்த அவர், இந்த அரசியல் கொள்கை மோதலில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.
ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. மனு ஸ்மிருதியை அம்பேத்கர் எரித்திருக்கிறார் எனவும் தெரிவித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை.
அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உதயநிதி பேசியதாக குறிப்பிட்டார். பதவியேற்பு உறுதி மொழிக்கு விரோதமாக செயல்பட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பின்னர், மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, நிகழ்ச்சியின் அழைப்பிதழ், பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தொடர்வதற்கு எதிரான வழக்கு; ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம்