தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு - பாஜக-வை விமர்சித்த பேசிய நாராயணசாமி

மத்திய அரசு, கடந்த ஆட்சியில் எங்களுக்குத் தொல்லை கொடுத்ததுபோல தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் மூலம் தொல்லை கொடுத்துவருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக

By

Published : Feb 15, 2022, 4:15 PM IST

புதுச்சேரி: நாராயணசாமி ஒரு காணொலிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய நாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் மோடி தலைமையிலுள்ள மத்திய அரசு அந்த மாநிலங்களின் நிர்வாகத்தை எந்தெந்த வகையில் முடக்க முடியுமோ அதற்கு முழுமையாக ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களைப் பயன்படுத்தி அந்த மாநில முதலமைச்சர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் இணைந்த மத்திய அரசு எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக கூட்டமைப்பை கொண்ட நாடு எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களை உதாசினப்படுத்துவதும், அரசியல் ரீதியாக அந்த மாநிலங்களை விமர்சிப்பது போன்ற தரம்தாழ்ந்த வேலையை பிரதமர் நரேந்திர மோடி செய்துவருகிறார்.

கடந்த ஐந்தாண்டு காலம் நான் முதலமைச்சர் என்ற முறையில் வேதனைகளை அனுபவித்துவந்துள்ளேன். அது இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆரம்பித்திருக்கிறது. நிதி கொடுக்காமல் மாநில வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு குந்தகம் விளைக்க முடியுமோ, ஆளும் அரசுக்கு கெட்டபெயர் உருவாக்கும் வேலையை பிரதமர் திட்டமிட்டு ஆளுநர் மூலம் செய்துவருகிறார்.

இதனால்தான் ஸ்டாலின் காட்டமான அறிக்கைகளை விடுத்துள்ளார். இதற்கிடையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சி ஆளும் முதலமைச்சர்களுக்கு அவர் அனுபவிக்கும் கஷ்டங்களையும், மத்திய அரசின் தொல்லைகள் குறித்தும் கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகு நரேந்திர மோடி அரசு இந்தியை திணிப்பதை வேடிக்கைப் பார்த்துவருகிறார்.

புதுச்சேரியில் தற்போது நடைபெற்றுவரும் கண்காட்சியில் இந்தி தலைதூக்கி உள்ளது. அந்த விழாவின் தலைப்பு குறித்து மக்களுக்குச் சரியான விளக்கம் கூட தெரியாது. புதுச்சேரியில் ரங்கசாமி கூட்டணியில் இருப்பதற்காகத் தலையாட்டி பொம்மைபோல் செயல்பட்டுவருகிறார்; இது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி மாநிலத்தில் இந்தி திணிப்பைத் தொடர்ந்து எதிர்ப்போம். புதுச்சேரியில் 300 கோடி ரூபாயில் புதிய சட்டப்பேரவை கட்ட அடிக்கல் நாட்ட மத்திய அமைச்சர் வருகிறார். நிதி ஒதுக்கப்பட்டது என்று சபாநாயகர் கூறினார். ஆனால், ஒன்றும் நடைபெறவில்லை. ரங்காசமி கொடுத்த எந்தக் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்தைப் புறக்கணிக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகளை பார்த்து ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருக்கிறார். மாநிலத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை” எனக் காட்டம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக திமுக என்னுடன் விவாதிக்கத் தயாரா? - அன்புமணி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details