புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து, அதில் தன் தலைமையில் 5,000 அமமுகவினரை திமுகவில் இணைக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்.
அதனடிப்படையில், அந்த நிகழ்ச்சி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ‘நீங்கள் அனைவரும் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளீர்கள், உங்களை வரவேற்கிறேன். பரணி தேர்தல் நேரத்தில் கில்லாடியாகப் பணிபுரிவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அங்கு விசுவாசமாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும். தற்போது திமுகவில் இருக்கிறார். அங்கு எப்படி பணிபுரிந்தாரோ அதைவிட பல மடங்கு இங்கு பணிபுரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு உங்களை ஊக்குவிக்க ஆட்கள் இல்லை. ஆனால் இங்கு நான் உள்ளேன்’ என்றார்.