சென்னை:காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இந்திய அரசியல் அமைப்பு பாதுகாப்பு வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 8 அமைப்புகள் இணைந்து தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 75 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெறவுள்ளது.
இதன் தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சி தொடக்க விழாவின்போது பேசிய, முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம்:"அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர் அண்ணல் அம்பேத்கார். தலைமையில் உள்ள 70 பேரில் இருவர் தமிழர் என்பது பெருமை, மல்லாடி கிருஷ்ணசாமி, என்.கோபால்சாமியும் ஆவார். நாடாளுமன்ற படியை தொட்டு வணங்கி விட்டு, மைய அவையில் அரசியல் சாசன நூலை வணங்கி விட்டு பிரதமராக மோடி பதவியேற்று எட்டு ஆண்டுகளாக செயல்படுகிறார்.
அரசியல் சாசன நூலை வழங்கிவிட்டு பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக இந்த அரசியல் சாசனம் மீது அவருக்கு நம்பிக்கை உள்ளது என்று மட்டும் நினைத்து விடக்கூடாது. இந்து மகா சபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பில் உறுப்பினர் கிடையாது. ஆகையால் எங்களது பங்களிப்பு இல்லாத காரணத்தால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கின்றனர்.