சென்னை:இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பரப்புரை பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச்செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.