சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த பா.ஜ.க கொடிக் கம்பத்தை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை விவகாரத்தில் அக்கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரணை செய்ய பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நால்வர் குழுவை அமைத்து இருந்தார். இந்த குழுவில் சதானந்த கவுடா தலைமையில் சத்யபால் சிங், புரந்தேஸ்வரி மற்றும் பி.சி.மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நால்வர் குழு நேற்று இரவு சென்னை வந்திருந்த நிலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
மேலும், இந்த குழு இன்று (அக்.28) தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனுவையும் அளித்துள்ளது. அதில், "தமிழ்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில அரசிடம் இதனை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு நீதி திமுகவிற்கு ஒரு நீதி என்று உள்ளது. புகார்தாரரின் அரசியல் சார்பு ஏதுவாக இருந்தாலும் அனைத்து புகார்களும் முழுமையாக முறையாக விசாரிக்கப்பட்டு உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க:"சந்திரயான் தென்துருவத்தின் அருகில் இறக்கப்பட்டுள்ளது.. தென்துருவத்தில் இறக்கப்படவில்லை.. இதில் மறைக்க எதுவுமில்லை" - விஞ்ஞானி வீரமுத்துவேல்!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லை. பட்டப் பகலில் கொலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வழிப்பறி, மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜகவினர் மேல் 409க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசு சட்டத்திற்கு புறம்பாக பழிவாங்கும் நோக்கத்துடன் பாஜகவினர் மீது அற்பமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சியின் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசின் பழிவாங்கும் நோக்கம் பிரதிபலிக்கிறது.
தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கைகளின் போது பாஜக பெண் தொண்டர்களை காவல்துறையினர் மோசமாக நடத்தியுள்ளனர். சாதாரண சமூக ஊடக பதிவுகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவதும், பாஸ்போர்ட் பறிமுதல் செய்வதும், பாதிக்கப்பட்ட தொண்டர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் அச்சுறுத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பா.ஜ.க நால்வர் ஆய்வுக் குழு இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் ஆய்வுகள் மேற்கொண்டு அதன்படி அறிக்கை தயார் செய்து டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையிடம் வழங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக பேட்டி