சென்னை:அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2,438 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குனர்கள் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில்குமார், நாகராஜ், மேனேஜர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், ஏஜென்ட் ரூசோ மற்றும் சந்திரசேகர் ஆகிய 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த நிறுவனத்தின் மேனேஜிங் இயக்குனர் ராஜசேகர், மைக்கேல் மற்றும் உஷா ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதால், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடி ரூபாயும், 1.13 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் வங்கி கணக்கு இருப்பில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 97 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவரான ஹரிஷ் மற்றும் நிர்வாகி மாலதி ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ், இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். மேலும் இவருக்கு சமீபத்தில் பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாநிலச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.