தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: பாஜக பிரமுகரிடம் 1 மணி நேரம் விசாரணை! - Alex BJP

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகரிடம் 1 மணி நேரமாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: பாஜக பிரமுகரிடம் 1 மணி நேரம் விசாரணை!
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: பாஜக பிரமுகரிடம் 1 மணி நேரம் விசாரணை!

By

Published : Apr 12, 2023, 9:38 PM IST

சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இந்த வழக்கில் இதுவரை 11 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், இயக்குனருமான ஹரிஷை, 11 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் ஹரிஷ், பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி இருப்பதும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பணம் பெற்றுக் கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கி கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே குற்றம் சாட்டப்பட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜகவைச் சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும், இன்று (ஏப்ரல் 12) அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்மன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், இன்று மாலை 4 மணியளவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு 1 மணி நேரமாக விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அலெக்ஸ், “ஆருத்ரா நிறுவன வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். பாஜக நிர்வாகி ஹரிஷ், ஆருத்ரா வழக்கு தொடர்பாக என்னிடம் வந்தார். அவருக்கு சில ஆலோசனைகளை, வழக்கறிஞர் என்ற முறையில் அளித்தேன். அவரை இதுவரை ஒரு முறைதான் சந்தித்துள்ளேன். 5 முறை செல்போனில் பேசி உள்ளேன்.

மற்றபடி ஒரு தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை இல்லை. அந்த நிலைமை எப்போதுமே வராது. மேலும் காவல் துறையினர் கூறியபடி, ஹரிஷுக்கும், எனக்கும் எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்பித்து இருக்கிறேன். என்னைப் பற்றி காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கை குறித்து விளக்கம் கொடுத்துள்ளேன். மறு விசாரணை நடத்த இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்” என கூறினார்.

இதையும் படிங்க:அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம்.. முன்னாள் ராணுவ வீரர் கைது!

ABOUT THE AUTHOR

...view details