பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், 'தங்களைப் போன்ற நல்ல இளைஞர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள் இப்பெரிய துறையாம் பள்ளிக்கல்வித்துறைக்கு நம்பிக்கை நட்சத்திரமாய் பொறுப்பேற்றுள்ளதைப் பெருமையோடு வரவேற்கின்றோம்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அன்றும், இன்றும், என்றும் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, எங்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், எங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரையும் நாங்கள் அரவணைத்து தேர்தல் பணியாற்றி வெற்றிபெறச் செய்ததில் தனியார் பள்ளிகளுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு என்பதை அனைவரும் அறிவார்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அரசின் பெரும் பணச்சுமையை குறைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி மத்திய மாநில அரசின் பொருளாதாரத்தை உயர்த்தி, அனைவருக்கும் தரமான கல்வியைக் கிடைக்கச் செய்வதில் மிகப் பெரும் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த மார்ச் 2020தொடங்கி இன்று வரை 2 ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. படித்த, படிக்காத மாணவர்கள் அனைவரையும் 'ஆல்பாஸ்' என்று அறிவித்து விட்டோம். ஆனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் முறையாக வழங்கப்படவில்லை. மாணவர்களின் கல்வித்தரம் ஆராயப்படவில்லை. பள்ளிகள் திறக்கவில்லை. பாடம் நடத்த முடியவில்லை. பாடங்களை இணையதளம் வழியாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் 75 விழுக்காடு கட்டணம் தனியார் பள்ளிகள் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியும், 20 விழுக்காடு பள்ளிகளால் கூட அந்த கல்விக்கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. குறிப்பாக நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஒரு விழுக்காடு கூட வசூலிக்க முடியவில்லை. அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வாழ்விழந்து நிற்கும், கல்வி கற்பிப்பதை தவிர வேறு வேலை தெரியாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார நிதியாக தெலுங்கானா அரசு தந்தது போல, மாதம்தோறும் ரூ.2500 வாழ்வாதார நிதியும் 25 கிலோ அரிசியும் தந்தால் அவர்கள் உயிர் வாழ ஏதுவாகும்.
10, 11, 12,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மதிப்பெண்களோடு கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க அந்தந்த பள்ளிகளில் நடத்திய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயிக்கலாம் அல்லது இணையதள வழியாகக் கூட திறனறி தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை நிர்ணயித்தால் சிறப்பாக இருக்கும். மதிப்பெண்கள் இல்லாத மதிப்பெண் சான்றிதழ் கரோனாவுக்கு சமமாகும். மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண் சான்றிதழ், தரத்தை நிர்ணயிக்க அடுத்து படிக்கவேண்டிய படிப்புகளைத் தேர்வு செய்திட, மதிப்பெண் சான்றிதழ் மரியாதையாக இருக்கும். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த மாட்டார்கள். பெற்றோர்கள் நிலை உணர்ந்துதான் தனியார் பள்ளிகள் செயல்பட்டு கொண்டுள்ளன.
ஏதோ ஒரு சில பள்ளிகள் தவறு செய்கிறபோது அந்த பள்ளிகள் மீது தனியாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. தமிழ்நாடு அரசின் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் நாங்கள் என்றும் பக்கபலமாய் உடனிருந்து ஒத்துழைப்போம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா உறுதி