சென்னை:கரோனா தடுப்பூசி குளறுபடி, சரியான நிர்வாகமின்மை போன்ற காரணங்களால் பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனைத் தணிக்கவும், அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டும் ஒன்றிய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
லோக் ஜனசக்தி விலாஸ் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், கர்நாடக பாஜக எம்பி சுரேஷ் அகாதி ஆகியோர் மரணம், கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேற்றம் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை நிரப்பும் வகையில், புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. ராம் விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான், அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.