சென்னை பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் இன்று (செப்.16) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சென்னை பெரியார் திடலில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்து மதத்தை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார். இந்துக்கள் பற்றிய அவதூறான கருத்தை நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக ஆ. ராசா கூறியதில் இருந்தே அவருக்கு சட்ட அறிவும் சுத்தமாக இல்லை.
இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதால் அவர் ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா இது குறித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டை பாஜக மகளிர் அணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்தார்.