சென்னை:பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 8) புகார் ஓன்றை அளித்தார். அதில் அவர், "ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பெண் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, சமீபத்தில் காளி தெய்வம் வேடமிட்டு ஒரு கையில் LGBTQ+ கொடி ஏந்தியபடியும், மற்றொரு கையில் புகைப்பிடிப்பது போன்ற தோற்றத்துடனும் உள்ள புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இவரது இத்தகைய செயல் கோடான கோடி இந்து மக்களின் நம்பிக்கையை கேலி கிண்டல் செய்வது போல் உள்ளது. மேலும் இத்தகைய செயல்கள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் திருநங்கைகள் பலர் கடுமையாக விரதம் இருந்து, மாமிசம் கூட உண்ணாமல் காளி தெய்வத்தின் வேடம் பூண்டு ஊர்வலமாக வருவார்கள்.
இவ்வாறு இருக்க தனது ஆவணப்படத்தை விளம்பரப்படுத்த லீனா மணிமேகலை இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லீனா மணிமேகலையின் இத்தகைய செயலால், தமிழ்நாடு மக்களிடையே பிளவை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்தும் சூழல் உண்டாகியுள்ளது. மேலும் இவரது ஆவணப்படம் வெளிவரும்பட்சத்தில் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதுடன் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி கலவரத்தை தூண்ட வழிவகை செய்யும்.
எனவே, இந்து கடவுள் குறித்த புரிதல் இல்லாமல் காளி தெய்வத்தின் உருவத்தை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது ஆவணப்படத்தை வெளியிட தடை செய்ய வேண்டுமென்றும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்தியா முழுவதும் இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி புகார் அளித்து வரும் நிலையில், சென்னையிலும் தற்போது பாஜக தரப்பு புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ