சென்னை:கரோனா தொற்று மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
ஸ்டெர்லைட்டை அரசு கைப்பற்றுமா?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அரசே கைப்பற்றி இயக்கலாமா அல்லது வேதாந்தா நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக உள்ளிட்ட எட்டு கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு, அந்தக் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
கூட்டத்தில், பாஜக தரப்பில் ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே கோரிக்கை திமுக சார்பில் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஸ்டெர்லைட் திறப்பு குறித்து தீர்மானம்?
மேலும், இன்று மாலைக்குள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரம், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போது சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடதக்கது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள்
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக சார்பில் எம்பி கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன், கே.டி. ராகவன், தேமுதிக சார்பில் கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், வழக்கறிஞர் பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன், வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் தங்கபாலு, பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மதிமுக, விசிகவிற்கு அழைப்பு இல்லை!
அவர்களுடன் மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதிமுக, விசிகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.